×
 

தாம்பரம் அருகே 156 கிலோ கஞ்சா பறிமுதல்! ஒடிசாவில் இருந்து கடத்திய 3 பேர் கைது!

தாம்பரம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 156 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

 ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு மற்றும் சென்னைக்கு அஞ்சல் பார்சல் மற்றும் சொகுசு கார் மூலம் கடத்தி வரப்பட்ட 156.340 கிலோ கஞ்சாவைக் பறிமுதல் செய்த தாம்பரம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்காக தீவிர சிறப்பு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் தற்போது ஒடிசா மாநிலத்தில் வசித்து வருபவருமான வெங்கட சுப்பிரமணியன் என்பவர், ஒடிசாவில் இருந்து சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்து தாம்பரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:20 மணியளவில் திருமுடிவாக்கம் அருகே உள்ள சிறுகளத்தூர் மீன் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) சொகுசு காரைச் சோதனையிட்டனர். அதில் 3 பார்சல்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 55.700 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (37), பல்லாவரத்தைச் சேர்ந்த சுமன் (27) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் எக்ஸ் பட்லு (22) ஆகிய 3 பேரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி வெங்கட சுப்பிரமணியனிடம் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் T. அணில்குமார் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து 'இந்தியா போஸ்ட்' (India Post) அஞ்சல் சேவை மூலமாக 7 பார்சல்களில் கஞ்சாவை அனுப்பியதும், அவை பல்லாவரம் அஞ்சலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், கஞ்சா துர்நாற்றம் வெளியே வராமல் இருப்பதற்காகப் பார்சல்களின் மீது மஞ்சள் தூள் தூவி கடத்தி வந்த பகீர் தகவலும் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து பல்லாவரம் அஞ்சலகத்திற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்சல்களைப் பறிமுதல் செய்து சோதனையிட்டதில் மேலும் 100.640 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த அதிரடிச் சோதனையில் ஒட்டுமொத்தமாக 156.340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என தாம்பரம் மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share