இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!
தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ள நிலையில், கடந்த ஆண்டுகளைப் போல உரையை வாசிக்காமல் புறக்கணிப்பாரா அல்லது முழுமையாக வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இதற்காகச் சட்டசபைக்கு வரும் அவருக்குச் சபாநாயகர் அப்பாவு மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், தேசிய கீதத்தை முதலிலேயே இசைக்கவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்த வரலாறு அவருக்கு உண்டு. இதனால், இன்றும் அவர் தனது உரையைத் தடையின்றி வாசிப்பாரா என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
அவை விதிமுறைகளின்படி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும், அதன் பின்னரே ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டும். ஒருவேளை ஆளுநர் உரையை வாசிக்காமல் அமர்ந்தாலோ அல்லது வெளியேறினாலோ, சபாநாயகர் அதன் தமிழாக்கத்தை முழுமையாக வாசிப்பார். இன்றைய கூட்டம் முடிந்தவுடன் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், இந்தத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் 21-ஆம் தேதி மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 22 முதல் 24-ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தேர்தல் ஆட்டம் ஆரம்பம்!" இன்று கூடுகிறது அமைச்சரவை.. கவர்னர் உரை முதல் பென்ஷன் வரை ஆலோசனை!
சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா புழக்கம் மற்றும் கரூரில் 41 பேர் பலியான சம்பவம் போன்ற விவகாரங்களை ஆயுதமாக ஏந்தி அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைத் துளைத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளன. மறுபுறம், அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதையும் பட்டியலிட்டுப் பதிலடி கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தயாராக உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும் அரசியல் பரபரப்பிற்கும் சற்றும் பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
இதையும் படிங்க: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! "11 லட்சம் கோடியா? அண்டப் புளுகு!" - அமித்ஷாவை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு!