பறவைக்காய்ச்சல் எதிரொலி! சென்னையில் செத்து மடியும் காகங்கள்! தமிழக பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
தமிழகத்தில் பறவை காய்ச்சலால் காகங்கள் பரவலாக உயிரிழந்து வரும் நிலையில், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என, தமிழக பொது சுகாதாரத் துறை அலட்சியம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காகங்கள் பெருமளவில் உயிரிழந்து வருகின்றன. சென்னை அடையாறு, வேளச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காகங்கள் திடீரென சரிந்து இறந்து கிடக்கின்றன. சென்னையில் மட்டும் 1,000 முதல் 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (NIHSAD, போபால்) இந்த காகங்களின் மாதிரிகளை பரிசோதித்து H5N1 வகை உயர் பாதிப்பு ஏற்படுத்தும் பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து மாநில அரசு முழு அளவில் எச்சரிக்கை நிலைக்கு சென்றுள்ளது. காகங்கள் இறந்த இடங்களில் சுத்தம் செய்தல், உடல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல், கண்காணிப்பு அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், கோழி, புறா, கொக்கு போன்ற பிற பறவைகளின் இறப்புக்கு பறவை காய்ச்சல் காரணம் இல்லை என கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது. அவற்றின் மாதிரிகள் பரிசோதனையில் எதிர்மறை முடிவே வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், கடலூரில் கங்கணாங்குப்பம் போன்ற இடங்களில் காகங்கள் இறந்த பிறகு அவற்றை கொத்தித் தின்ற நாட்டுக் கோழிகளும் இறந்ததால் மக்களிடையே பீதி பரவியுள்ளது.
இதையும் படிங்க: "தளபதி ஸ்டாலின்" … மீண்டும் திமுக ஆட்சிதான்… OPS நம்பிக்கை..!!!
முக்கிய கேள்வி: மனிதர்களுக்கு ஆபத்து உண்டா?
இதுவரை தமிழகத்தில் பறவை காய்ச்சலால் மனிதர் எவரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. H5N1 வைரஸ் மனிதர்களுக்கு அரிதாகவே பரவுகிறது. ஆனால், இறந்த பறவைகளை வெறும் கையால் தொடுதல், அவற்றின் எச்சங்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுதல் ஆகியவை ஆபத்தை அதிகரிக்கும். எனவே, இறந்த காகங்கள் அல்லது பறவைகளை தொடாமல் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது கால்நடை துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பொது மக்களிடையே விழிப்புணர்வு இன்னும் பெரிய அளவில் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை பெயரளவிலான நடவடிக்கைகளையே மேற்கொள்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர விழிப்புணர்வு பிரசாரம், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தேவை என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
மக்களே எச்சரிக்கை!
- இறந்த பறவைகளை தொடாதீர்கள்.
- கையுறை, முகக்கவசம் அணிந்து தகவல் தெரிவியுங்கள்.
- அசாதாரண பறவை இறப்புகளை உடனே அறிக்கையிடுங்கள்.
இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் கோழி வளர்ப்பு, பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறலாம். அரசு மேலும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது!
இதையும் படிங்க: “மூழ்கும் கப்பலான பாஜகவை தூக்கும் நீர் மூழ்கி கப்பல் தான் அதிமுக...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த திண்டுக்கல்லார்...!