×
 
☰

தமிழகத்தில் போதைப்பொருள் வேட்டை தீவிரம்! 9 மாதங்களில் 17,412 பேர் கைது! 808 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக மொத்தம் 11,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,769 வழக்குகளை பதிவு செய்து தென் மண்டல காவல் துறை முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த காவல் துறை சார்பில் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 9 மாதங்களில் மட்டும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 17,412 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 32 பெண்கள் உள்ளிட்ட 808 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகளில் அமலாக்கப் பணியக குற்றப் புலனாய்வுத் துறை எனப்படும் இ.பி.சி.ஐ.டி. முக்கிய பங்காற்றி வருகிறது. கூடுதல் டி.ஜி.பி. சங்கர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை என்ன? அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதேபோல், மாநிலம் முழுவதும் காவல் துறையின் பல்வேறு மண்டலங்களிலும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக மொத்தம் 11,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,769 வழக்குகளை பதிவு செய்து தென் மண்டல காவல் துறை முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. சங்கர் கூறுகையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,730 அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போதைப்பொருளாக தவறாக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மற்றும் மன அழுத்த நிவாரண மாத்திரைகளின் விற்பனையையும் கண்காணிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இதுபோன்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருந்தகங்களில் தொடர்ந்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மருந்துகளின் விற்பனை பதிவேடுகள், இருப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மருந்துகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது அல்லது போதை நோக்கில் பயன்படுத்தும் கும்பல்களுக்கு விநியோகிக்கப்படுவது கண்டறியப்பட்டால், காவல் துறையுடன் இணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share