மின்சார நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் 65,921 காலியிடங்கள்? ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்!
ஏற்கனவே தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என நிரந்தர பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக மின்வாரியத்தில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்களால் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் நுகர்வோருக்கான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மின்வாரியத்தில் 65,921 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஏற்கனவே தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என நிரந்தர பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மின்வாரியத்தின் கள உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதற்கான தரவரிசைப் பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்தகட்ட உடற்தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!
இதற்கிடையே, 10 ஆயிரம் களப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திட்டமுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுவது, ஏற்கனவே தேர்வு எழுதி காத்திருப்போர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மின் கணக்கீட்டாளர் பணியிடங்களிலும் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2018-ம் ஆண்டு வேலைப்பளு ஒப்பந்தத்தின்படி அனுமதிக்கப்பட்ட 7,591 பணியிடங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மின் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களே கணக்கீட்டு பணியையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணக்கீட்டாளர்கள் இல்லாத பகுதிகளில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. மின் இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கணக்கீட்டாளர்கள் இல்லாததால், மின் கணக்கீட்டில் குளறுபடிகள் ஏற்படுவதுடன், மின் கட்டண வருவாயிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.
இதனால், காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன், ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின்வாரியத்தின் மனிதவள பற்றாக்குறைக்கு அரசு எவ்வாறு தீர்வு காணப்போகிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு மத்திய மின்சாரம் திடீர் குறைப்பு! 5,000-ல் இருந்து 3,500 மெகாவாட்டாக சரிவு! புதிய நெருக்கடி!