டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!
டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர்களுக்கு விற்பனையாளருக்கு ரூ.10,871 வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை மதுபானக் கடைகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுப்பூதியத்தை அதிரடியாக உயர்த்தி, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கான (R.C.No.R2/418911/2026) அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் செயல்முறை உத்தரவை தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இன்று முறைப்படி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் (Supervisors), விற்பனையாளர்கள் (Salesmen) மற்றும் உதவி விற்பனையாளர்கள் (Assistant Salesmen) எனப் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாகத் தொகுப்பூதிய அடிப்படையில் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் கூடுதல் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. ஊழியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைகளைக் கூர்ந்து பரிசீலித்த டாஸ்மாக் இயக்குநர் குழுமம் சுற்றறிக்கை தீர்மானம் இயற்றி ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் இது தொடர்பான கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!
அந்த அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவின்படி அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு விரிவான வழிகாட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.10,871 வரை மிகப்பெரிய அளவில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், இந்த ஊதிய உயர்வானது கடந்த 2026 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள இந்த அதிரடி ஊதிய உயர்வு, குடும்பப் பொருளாதாரச் சுமையில் இருந்த கடைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஊழியர்களுக்கான புதிய ஊதியப் பலன்களைத் தொய்வின்றி வழங்கிட மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!