×
 

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் கையடக்கக் கருவி மூலம் சரக்கு ஆர்டர் செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை செப்டம்பர் 1 முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளில் சரக்குகளைக் கொள்முதல் செய்வதற்கான இன்டென்ட் கோரும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் வகையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கடைகளின் மேற்பார்வையாளர்கள் கையடக்கக் கருவி மற்றும் ஓடிபி அங்கீகார முறை வாயிலாக மட்டுமே சரக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து 38 மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் ஏற்கனவே முழுமையான கணினிமயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கொள்முதல் நடைமுறைகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடன் நெறிப்படுத்துவதற்காகக் கைக்கருவிகள் வழியே சரக்குகளைக் கோரும் புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறையின்படி, ஒவ்வொரு கடைக்கும் பிராண்ட் வாரியாகவும் பேக்கிங் வாரியாகவும் தேவைப்படும் சரக்கின் அளவு தானியங்கியாகவே கைக்கருவியின் திரையில் தோன்றும்.

இந்தத் தானியங்கி சரக்கு அளவை எக்காரணம் கொண்டும் குறைக்க முடியாது என்றும், விற்பனைத் தேவைக்கு ஏற்ப மேற்பார்வையாளர்கள் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை மட்டுமே சரக்கின் அளவை உயர்த்திக் கோர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் இல்லாத பிற பதிவு செய்யப்பட்ட மதுபான வகைகளையும் தேவைக்கேற்பப் புதிதாகச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டக் காலம் நடைமுறையில் உள்ளதால், மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் வாயிலாக இதன் அச்சுப் பிரதிகள் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, மேற்பார்வையாளர்கள் நேரில் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்பார்வையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) வாயிலாக மட்டுமே கோரிக்கையை இறுதி செய்ய முடியும். ஓடிபி மூலம் சமர்ப்பிக்கப்படும் அளவே இறுதியானது என்பதால், மேற்பார்வையாளர்கள் கூடுதல் கவனத்துடன் சரிபார்த்துப் பதிவேற்ற வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட மேலாளர்களும் ஊழியர்களுக்கு உரியப் பயிற்சிகளை வழங்கி இப்புதிய டிஜிட்டல் திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்றும் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share