"காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!
காவிரி விவகாரம் தொடர்பான தென் மண்டல கவுன்சில் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.
காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் மாநில எல்லைசார் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் தென் மண்டல கவுன்சில் (Southern Zonal Council) குழுவின் புதிய உறுப்பினர்களாக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளி ஆளுமை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் பிரிவு 16(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் பொதுத் துறை (இராணுவம்) இதற்கான சிறப்பு அரசாணையை (G.O. Ms. No. 461) வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இக்குழுவில், தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய உறுப்பினர்களாக இவ்விரு அமைச்சர்களும் செயல்படுவர்.
முன்னதாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போதைய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தென் மண்டல கவுன்சிலின் உறுப்பினர்களாகப் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு சபரீசன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ்!
மேலும், தென் மண்டல கவுன்சிலில் தமிழக அரசின் சார்பாகச் செயல்படும் ஆலோசகர்கள் கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முதன்மை ஆலோசகராகச் செயல்பட்டு வரும் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களுடன் இணைந்து, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் கே. மணிவாசன் ஐஏஎஸ் இக்குழுவின் இரண்டாவது ஆலோசகராக (Second Adviser) நியமிக்கப்பட்டுள்ளார்.
காவிரி நீர் உரிமை மற்றும் மேகதாது விவகாரங்கள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலில், புதிய அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரியின் இந்த நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் (Tamil Nadu Government Gazette Extraordinary) வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் மற்றும் மாநில எல்லை சார்ந்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், புதிய அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் இந்த நியமனம் தமிழக அரசு வட்டாரத்தில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!