குடை மட்டும் போதாது! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! முழு விவரம்!
நாளையும் (செப்.16) தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செப்.15) கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழையுடன் காற்றின் வேகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!
இதனிடையே, நாளையும் (செப்.16) தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் பழைய கட்டிடங்களின் அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளூர் வானிலை அறிவிப்புகளை கவனித்து செயல்படுவது பாதுகாப்பானதாக இருக்கும். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழை இன்னும் முடியவில்லை! செப்.10 வரை வந்தாச்சு அலர்ட்! தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?