தமிழக வானிலையில் திடீர் மாற்றம்! மீண்டும் மழை ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 4 நாட்களுக்கு வெதர் அலர்ட்!
தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை செயல்பாடு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று, செப்டம்பர் 7ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மழை இன்னும் முடியவில்லை! செப்.10 வரை வந்தாச்சு அலர்ட்! தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?
செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களுடன் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை பரவக்கூடும்.
செப்டம்பர் 11ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். வெப்பநிலை தொடர்ந்து 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களில் மழை பரவலாக இருந்தாலும், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மழை செயல்பாடு மிதமாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீட்டிக்கப்பட்ட முன்னறிவிப்பும் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?