×
 

தமிழக போலீசாருக்கு வார விடுமுறை சிக்கல்: 10 ஆயிரத்தை கடந்த காலியிடங்கள்... அடுத்த ஆண்டுக்கும் ஆட்கள் தேர்வு இல்லை!

காவல் துறையில் காலிப் பணியிடங்கள் தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.க்கள் வரை சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தமிழக காவல் துறையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவலர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பல மாவட்டங்களில் வார விடுமுறை நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை பணியாற்றுபவர்களுக்கு வார விடுமுறை வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து பணியாற்றும் போலீசாருக்கு ஓய்வு கிடைப்பதுடன், அவர்களின் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த அரசாணையை அனைத்து இடங்களிலும் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட அளவில் வார விடுமுறை வழங்கப்பட்டாலும், பல மாவட்டங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக நடைமுறையில் சிக்கல் நீடித்தது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது

இதுதொடர்பாக காவலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால் அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே நடைமுறை சிக்கல்களை அரசு பரிசீலித்திருக்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், போலீசாரின் குடும்பங்களும் பாதிக்கப்படுவதால் வார விடுமுறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். காவல் துறையில் காலிப் பணியிடங்கள் தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல் எஸ்.ஐ.க்கள் வரை சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், காவல் துறைக்கான புதிய ஆட்கள் தேர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போதுள்ள போலீசாரின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இதே பிரச்னை தொடர்வதாக போலீசார் குற்றம்சாட்டுகின்றனர்.

காவலர்களுக்கு போதிய ஓய்வு கிடைக்காதது நீண்ட நேர பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், காலிப் பணியிடங்களை நிரப்பி வார விடுமுறை அரசாணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share