717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?
தற்போதுள்ள 4,048 கடைகளில் தினசரி சராசரி விற்பனை 1 கோடி பாட்டில்களை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார
சென்னை: தமிழகத்தில் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மது விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, தினசரி விற்பனை சராசரி 1 கோடி பாட்டில்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தும் விற்பனை அளவு அதிகரித்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், விற்பனை விவரங்களை துல்லியமாக கண்காணிக்கவும் கடந்த ஆண்டு முதல் மதுபான ஆலைகளில் இருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் நிலை வரை கணினி மயமாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடைகளில் பயன்படுத்தப்படும் கையடக்க கருவிகள் மூலம் ஒவ்வொரு மதுபான பாட்டிலும் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை பதிவு செய்யப்படுகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்த காலகட்டத்தில், 4,765 டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக சுமார் 93 லட்சம் பீர் மற்றும் மதுபான பாட்டில்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டுக்குள்ளேயே ‘மினி டாஸ்மாக்’ நடத்திய விசிக பிரமுகர்... காத்திருந்து தட்டித்தூக்கிய காவல்துறை...!
இதற்கிடையில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் மாதம் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4,048 ஆக குறைந்தது.
ஆனால், கடைகள் எண்ணிக்கை குறைந்த நிலையிலும் மதுபான விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. தற்போதுள்ள 4,048 கடைகளில் தினசரி சராசரி விற்பனை 1 கோடி பாட்டில்களை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 1 கோடியைத் தாண்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மதுபானங்களை வாங்கும் முறையிலும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் இணையதளம் வாயிலாக தங்களுக்கு தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, ஆன்லைனில் பணம் செலுத்தி, பின்னர் கடைகளில் பெற்றுக்கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. விஸ்கி, பிராந்தி, ரம், வோட்கா, பீர், ஒயின், ஜின் உள்ளிட்ட வகைகளில் கிடைக்கும் மதுபானங்களின் விவரங்களும் விலையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!