சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள் மாவட்டங்களில் வெப்பம் 4°C வரை உயரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று மற்றும் நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 3.2 மி.மீ லேசான மழை பதிவாகியுள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் சுட்டெரிக்கும் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
செப்டம்பர் 3-ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் புதுவையிலும், செப்டம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் ஏனைய தமிழகப் பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை நீடிக்கக்கூடும். அதேவேளையில், உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து அனல் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வானிலை அப்டேட்! தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!