சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்..! தமிழ் வார விழா நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்பிப்பு..!
தமிழ் வார விழாவின் இறுதி நாளான இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாவேந்தர் பாரதிதாசனின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே ஐந்தாம் தேதியான இன்று வரை தமிழ் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வார விழாவையொட்டி கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்..! புதிய யுத்திகளை கையில் எடுக்கும் திமுக..!
அப்போது, தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய 41 நூல்களும், எழுத்தாளர் மெர்வின் எழுதிய 85-க்கும் மேற்பட்ட நூல்களும், எழுத்தாளர் பழநி எழுதிய 16 நூல்களும், தமிழறிஞர் கோதண்டம் எழுதிய 125-க்கும் மேற்பட்ட நூல்களும், தமிழறிஞர் தமிழ்நாவன் எழுதிய 34 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறை மூலம் நாட்டுடைமை செய்யப்பட்டது.
மேலும் அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம், நூலுரிமைத்தொகையாக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
இதையும் படிங்க: "தனித்துவமான முதல்வரின் முகவரி"... சேவைகளை சிறப்பாக பயன்படுத்த முதல்வர் கனிவான வேண்டுகோள்!