சென்னையில் பெரும் பதற்றம்...!! தமிழிசையை தடுத்து நிறுத்திய விசிகவினர்... போலீசார் குவிப்பு...!
சென்னை திருவெற்றியூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இப்படி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும், வழக்கறிஞர்களும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை திருவெற்றியூர் டோல்கேட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க தனது கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற தமிழசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெற்றியூர் டோல்கேட் பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேள தாளங்களோடு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திருவெற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை அம்மன் கோவிலுக்கு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் தரிசனம் செய்ய வந்தார்.
மேலும் மதவாத சக்திகளுக்கு எதிரான கோஷங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுப்பினர். இதனால் பாஜக மற்றும் விசிகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததுமே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது இருதரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே மாறி, மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழிசை சவுந்தரராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பாஜக கொடி இல்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வலியுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜனும் கட்சி கொடி இல்லாமல் சென்று அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு திரும்பினார், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் விட்ட எங்களுக்கு, மெட்ரோ ரயில் கொடுக்கத் தெரியாதா?... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!
இதற்கு முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம அணுமின் நகர் குடியிருப்பில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் கையில் கட்சி கொடி மற்றும் காவிதுண்டு அணிந்து மாலை அணிவிக்க வந்த 15 பெயர் கொண்ட பாஜக குழுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கொடியும் காவி துண்டும் அணிந்து வந்தால் மாலை அணிவிக்க அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு, கட்சி கொடி மற்றும் காவி துண்டு இல்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்... கொலீஜியத்துக்கு திருமா. வலியுறுத்தல்...!