×
 

இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

இன்னும், 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால், தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன.

சென்னை: தமிழகத்தில் புதிய த.வெ.க., அரசு அமைந்து இரு வாரங்கள் ஆன நிலையில், இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் 2026-27 நிதியாண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கடும் தாமதத்தை சந்தித்து வருகின்றன. இது அரசின் நிர்வாகப் பணிகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. அதற்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் விஜய் உள்பட ஒன்பது அமைச்சர்கள் கடந்த 10-ம் தேதி பதவியேற்றனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் வனம், சுற்றுச்சூழல், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு-சிறு தொழில்கள், சமூக நலன், மீன் வளம், பால் வளம், கால்நடை பராமரிப்பு, சுற்றுலா, போக்குவரத்து, ஹிந்து சமய அறநிலையம், உயர் கல்வி, தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட முக்கிய 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

நிதித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ஒன்பது அமைச்சர்களுக்கு மட்டும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பட்ஜெட் திட்டங்களை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 22 துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாததால் துறைச் செயலர்கள் குழப்பத்தில் உள்ளனர். பட்ஜெட் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால், அமைச்சர்கள் ஒப்புதல், நிதித்துறை சமர்ப்பிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் தாமதமடையும்” என்றனர்.

குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது தாமதமானால் குறுவைப் பருவத்துக்கான உரம், விதை, மானியங்கள் உள்ளிட்ட சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும் நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இந்த விவகாரத்தை உடனடியாக கவனத்தில் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் பட்ஜெட் தாக்கல் தேதி தள்ளிப்போடப்படும் நிலை உருவாகலாம்.

தமிழக அரசின் முதல் முழு பட்ஜெட் தயாரிப்பு இந்த இழுபறியால் தொடக்கத்திலேயே சவாலை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share