×
 

"தமிழ்நாடு நாள்" ! பேரவையில் மேசையொளிகள் விண்ணதிர்ந்த தருணங்கள்... நினைவுகளை வெளிப்படுத்தி முதல்வர் பெருமிதம்

சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய போது மேசை ஒலிகள் விண்ணதிர்ந்ததாக முதல்வர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, சென்னை மாகாணம் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கேரளாவின் மலபார் பகுதி, மற்றும் கர்நாடகத்தின் தெற்கு கன்னடம் மற்றும் பெல்லாரி ஆகிய பகுதிகள் உள்ளடங்கியிருந்தன. 1950 இல் இந்தியா குடியரசாக மாறியபோது, இது மதராஸ் மாநிலம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1953 இல் ஆந்திரப் பகுதிகள் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலமாகவும், 1956 இல் மலபார் மற்றும் தெற்கு கன்னடம் பகுதிகள் கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.

இதன் பிறகு, மதராஸ் மாநிலம் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டிருந்தாலும், அதன் பெயர் "சென்னை மாகாணம்" அல்லது "மதராஸ் மாநிலம்" என்றே தொடர்ந்து இருந்தது.இந்தப் பெயர், தமிழர்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்பது பலரின் கருத்தாக இருந்தது. தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையின் உச்சமாக, விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதியான சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கோரி, 76 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு 1956 இல் உயிர் துறந்தார். அவரது தியாகம், இந்தப் பெயர் மாற்றத்திற்கான மக்கள் ஆதரவை மேலும் தீவிரப்படுத்தியது. 

பேரறிஞர் அண்ணாவின் பங்குபேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவராகவும், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் மீது அளவற்ற பற்று கொண்டவராகவும் விளங்கினார். 1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை நிறுவிய அண்ணா, "தமிழ்நாடு" என்ற பெயரை முன்மொழிந்தார். 1967 ஆம் ஆண்டு, திமுக மாபெரும் வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1967 ஜூலை 18 அன்று, சென்னை மாநில சட்டமன்றத்தில், மதராஸ் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதையும் படிங்க: கச்சத்தீவை தாரை வார்த்ததே திமுகதான்.. இப்ப என்ன அக்கறை? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

இந்த தமிழ்நாடு நாள் தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது என்றும் தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் எனவும் கூறினார். அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த நாள் இந்த நாள் தான் என்று நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை ஓட ஓட வெட்ட துரத்தும் போதை ஆசாமிகள்... அண்ணாமலை அதிருப்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share