×
 

கொட்டிக் கொடுத்தும் பத்தலையா?... டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் வசூல் வேட்டை படுஜோரு... அமைச்சர் விக்னேஷுக்கு புது தலைவலி...!

தூத்துக்குடி குறிஞ்சி நகர் சாலையில் ஒரே கடை எண்ணில் 3 ஷட்டர்கள் மூலம் மது விற்பனை அமோகம், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும் மதுபிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். குறிப்பாக, சில ஊழியர்கள் மதுபாட்டிலின் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.  ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, இதுபோன்ற கூடுதல் வசூல் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க தவெக அரசு முயன்றது. ஆகஸ்ட் 31 அன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் புதிய ஊதிய முறையை அறிவித்தார். இது செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குடி மகன்கள் புகார் அளித்து வருகின்றனர். 

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், செயல்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மதுபானக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி, அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மூடப்பட்ட மதுபானக் கடைகள் புதிய இடங்களில் திறக்கப்படும்போது, அந்தப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகர் சாலையில் முன்பு இரண்டு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்ததாகவும், அதில் ஒரு கடை அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது செயல்பட்டு வரும் மற்றொரு மதுபானக் கடையில் ஒரே கடை எண்ணில் மூன்று ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் மது விற்பனை நடைபெற்று வருவதாக மதுபிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

இதுகுறித்து அங்கு மது வாங்க வந்த சிலரிடம் கேட்டபோது, 3 ஷட்டர்களிலும் வெவ்வேறு விலையிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். ஒரு ஷட்டரில் ரூ.155 மதிப்பிலான மதுபானமும், மற்றொரு ஷட்டரில் ரூ.200 மதிப்பிலான மதுபானமும், மூன்றாவது ஷட்டரில் ரூ.265 மதிப்பிலான மதுபானமும் தனித்தனியாக விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.

மேலும், மற்றொரு மதுபானக் கடை மூடப்பட்டுள்ளதால் தற்போது செயல்பட்டு வரும் கடையில் வழக்கத்தைவிட விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுபிரியர்கள் மேலும் கூறுகையில், “மதுபானக் கடையை முழுமையாக மூட வேண்டும். இல்லையெனில், குடியிருப்புகள் அதிகம் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் மதுபானக் கடைகளை அமைக்க வேண்டும். ஊரின் நடுப்பகுதியில் மதுபானக் கடை இருப்பதால், கூட்டத்தில் நின்று மது பாட்டில்களை வாங்குவதற்கு சங்கடமாக உள்ளது.

மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பது கடந்த ஆட்சிக் காலத்திலும் இருந்ததாக கூறப்பட்டது. தற்போது மதுபான விற்பனை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக கூறப்படுகிறது. சிலர் பாட்டிலை வழங்கிவிட்டு ரூ.10 பெற்றுக்கொள்கின்றனர். சிலர் பாட்டிலை வழங்காமல் அந்தத் தொகையை பெற்றுக்கொள்வதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மது வாங்கும் நபர்களுக்கு அந்த ரூ.10 கூடுதல் செலவாகிறது.

எனவே, மதுபான விற்பனையை அரசு முறையாக கண்காணித்து, கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். மேலும், மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே அமைத்தால் பொதுமக்களுக்கும் மதுபிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்” என்றனர்.

மதுபானக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறதா, மூன்று ஷட்டர்கள் மூலம் விற்பனை நடைபெறுவது விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதையும் படிங்க: டாஸ்மாக் வருவாயில் புதிய சாதனை? 4 மாதத்தில் ரூ.17,854 கோடி! முழு கணக்கு இதோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share