21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!
21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தவிர்க்க டாஸ்மாக் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 21 வயது பூர்த்தி அடையாத நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்கவோ அல்லது வழங்கவோ கூடாது. கடைக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் விற்பனையாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டால், வயதிற்கான ஆதாரமாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கேட்டுச் சரிபார்த்த பின்னரே மது விற்பனை செய்ய வேண்டும். இந்த விதிகளை மீறி 21 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக, முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மது அரக்கனிடமிருந்து இளைஞர்களைக் காக்கும் வகையில் இந்த வயது வரம்பு கட்டுப்பாடும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
இந்த அதிரடி நடவடிக்கையானது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?