பாட்டிலுக்கு ரூ.10..! புதிய திட்டம்... டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..!!
பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புதிய திட்ட அம்சங்களை விரைவில் அமல்படுத்த உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், காடுகள், நீர் நிலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்கவும் நீண்டகாலமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது.
தற்போது செயல்படும் முறையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும் போது அந்தத் தொகையை திருப்பித் தரும் நடைமுறை உள்ளது. இந்த முறை சரியாக செயல்படுத்தப்படாததால் பல்வேறு புகார்கள் எழுந்தன. புதிய திட்டத்தில் முக்கிய மாற்றம் என்னவென்றால், ரூ.10 தொகையை தனியாக வசூலிப்பதற்கு பதிலாக மதுபானத்தின் விலையுடன் சேர்த்து வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ரசீதில் தெளிவான பதிவு கிடைக்கும்.
மேலும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணியை டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து மாற்றி, மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக வரித்துறை சார்பில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது சில மாவட்டங்களில் பைலட் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு நேரடி செக்! அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம்! மூடப்படாத மதுக்கடைகள் பட்டியல் வெளியீடு!
AI இயங்கும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பாட்டில்களை திருப்பி ஏற்கும் சோதனை முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர். கூடுதல் ரூ.10 தொகையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும், ரசீதில் தெளிவாகக் குறிப்பிடவும் உத்தரவிட்டுள்ளனர். திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கையை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும், முன்னேற்ற அறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!