×
 
☰

துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

துரோகத்திற்கும் அதிகார துஸ்பிரயோகத்திற்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இனி தமிழ்நாட்டில் எவருக்கும் துரோக சிந்தனையே வராத வகையில் வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள் என்ற மாபெரும் வரலாற்று நிகழ்வை மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (04-10-2026) விரிவான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றி வருகிறது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தவெக பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து, ஆட்சி அமைப்பதற்குப் போதிய பலம் இல்லாத நிலையிலும் பிற கட்சிகளின் தயவோடு மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல், பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சாடினார்.

இடைத்தேர்தல் உருவான பின்னணியை விவரித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் குறுக்கு வழியில் தவெக தலைமை குதிரை பேரம் நடத்தியது; வாக்களித்த வாக்காளர்களின் 'விரல் மை' காய்வதற்குள் ஒருசில சுயநலத் துரோகிகள் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கித் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்; அவர்களின் துரோகத்தால் திணிக்கப்பட்டதே இந்த இடைத்தேர்தல் என்று தெரிவித்தார்.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் பச்சைத் துரோகத்தை இழைத்தவர்களே தற்போது வெட்கமே இல்லாமல் தவெக சார்பில் வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்கியுள்ளனர்; சிறிதும் கூச்சமின்றி மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு அவர்கள் கேட்பதைச் சகித்துக் கொள்ள முடியாத தொகுதி மக்கள், துரோகிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து விரட்டியடித்த காட்சிகளை நாடே பார்த்தது எனக் குறிப்பிட்டார்.

தோல்வி பயத்தில் தவெகவினர் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறியும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான வழிகளில் ஈடுபட்டும் வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும், மைனாரிட்டி அரசை குறுக்கு வழியில் மெஜாரிட்டியாக மாற்ற நினைக்கும் தவெகவின் தீய எண்ணத்திற்கு மக்கள் தகுந்த சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதிப் பிரச்சார அனுபவத்தைப் பகிர்ந்த அவர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கழக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தாய்மார்களும் வாக்காளப் பெருமக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து அளித்த எழுச்சிமிகு வரவேற்பைப் பார்த்தபோதே அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது தெளிவாகத் தெரிந்தது என்றார்.

இறுதியாக, விசுவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, துரோகத்திற்குப் பெயர் போன தவெக வேட்பாளர்களைத் தோற்கடித்து, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் கணிதா சம்பத் அவர்களுக்கும், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே. பானுமதி அவர்களுக்கும் அதிமுகவின் வெற்றிச் சின்னமான 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் எவருக்கும் துரோகம் செய்யும் எண்ணமே எழாத அளவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share