கணவர் நினைவிடத்தில் கண்ணீருடன் வீரவணக்கம்! தஞ்சாவூரில் கண்கலங்க வைத்த பெண் காவல் ஆய்வாளர்!
அவர்களுக்கும் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரையும் டி.ஐ.ஜி. சந்தித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்: காவலர் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு தஞ்சாவூரில் 66 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, பணியின்போது உயிரிழந்த தனது கணவருக்கு அவரது மனைவியும், காவல் ஆய்வாளருமான பகவதிசரணம் கண்ணீருடன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் அங்கிருந்த காவலர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்கள், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 8 புதிய சிலைகள்: ஓராண்டுக்குள் நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பணியின்போது நான்கு காவலர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கும் நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரையும் டி.ஐ.ஜி. சந்தித்து மரியாதை செலுத்தினார்.
இதில், தஞ்சாவூர் ஆயுதப்படை வாகனப் பிரிவில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) சுரேஷ்குமார், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பணியின்போது உயிரிழந்தார். அவரது மனைவி பகவதிசரணம், தற்போது மாவட்டக் குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், கணவரை இழந்த துயரத்துடன் பகவதிசரணம் அணிவகுப்பில் பங்கேற்றார். பின்னர், கணவரின் நினைவாக மலர்வளையம் வைத்து கண்ணீருடன் வீரவணக்கம் செலுத்தினார். காவல்துறை சீருடையில் கடமையாற்றும் அவர், தனது கணவருக்கு அஞ்சலி செலுத்திய அந்தத் தருணம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைக் கண்ட சக காவலர்களும் கண்கலங்கி நின்றனர்.
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தையும், அவர்களை இழந்து வாழும் குடும்பத்தினரின் வலியையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இதையும் படிங்க: அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!