நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!
அதிமுக ஆட்சி அமைந்தால், அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படும். பெரம்பூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுச் சென்னையில் இன்று சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
மத்திய அரசுடனான உறவு மற்றும் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அணுகுமுறை குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மட்டும் ஜெயித்துவிட்டு என்னவெல்லாம் செய்றீங்க.. அவர் (பிரதமர்) இந்த நாட்டையே ஆள்கிறாரே, அவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! அதை உணராமல் வீராப்பு பேசிக்கொண்டிருந்தால் மக்களுக்குத் திட்டங்கள் கிடைக்காது என்று சுட்டிக்காட்டினார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, இதுவரை யாருமே பெறாத பல நல்ல திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததாகத் தனது ஆட்சிக் காலத்தை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏழை எளிய மக்களின் உணவுக் பாதுகாப்பு குறித்து அவர் பேசியதாவது தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், தற்போது முடக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, குறைந்த விலையில் மீண்டும் தரமான உணவுகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அம்மா உணவகங்களைப் பராமரிக்காமல் திமுக அரசு திட்டமிட்டே முடக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: டெல்லியின் முரட்டு அடிமை பழனிசாமி! எடப்பாடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'முரட்டு' சாடல்!
வெறும் அரசியலுக்காகப் பிரதமரையும் மத்திய அரசையும் விமர்சித்துக் கொண்டே இருந்தால், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் திட்டங்களில் முட்டுக்கட்டைதான் ஏற்படும். இது மக்களுக்குச் செய்யும் துரோகம்" என வில்லிவாக்கத்தில் அவர் ஆக்ரோஷமாகப் பேசினார்.
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறிய ஈ.பி.எஸ், வரும் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் விரும்பும் அதிமுக ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!