ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!
தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் தலைமறைவானதால், ஏ.டி.எஸ்.பி விசாரணை செய்ய முடியாமல் திரும்பி சென்றார்.
நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக மானாமதுரை குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவமே நாட்டை உலுக்கியுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தேனி போலீசார் பட்டியலின இளைஞரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருப்பவர் அபுதல்ஹா. இந்நிலையில், தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவரை அழைத்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து, ஆய்வாளர் அபுதல்ஹா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு உள்ளிட்டோர் ஷூ காலால் எட்டி உதைத்து, லத்தியால் தாக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது/ சிசிடிவியில் 14-01-2025 என்று இருப்பதால், இந்த சம்பவம் 6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ விவகாரம் குறித்த விசாரணையில் அந்த வீடியோவில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதும் அவரது பெயர் ரமேஷ் என்பதும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ஆனால் இவரை ஏன் காவல்துறையினர் இழுத்து வந்து, கண்மூடித்தனமாக தாக்கினர் என்பது குறித்தான தகவல்கள் தெரியவில்லை.
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு முன்பே நடந்த நிஜ 'ஜெய்பீம்' சம்பவம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
எனவே தமிழக அரசு தாமாக முன்வந்து, தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இளைஞரின் தற்போதைய நிலை என்ன? அவர் என்ன வழக்கிற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்? என்பது குறித்து உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினரின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், குற்றம் செய்த காவல்துறையினர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை துவங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி, இளைஞரை தாக்கிய தேவதானப்பட்டி ஆய்வாளர் அபுதல்ஹா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு மற்றும் காவலர்களான மாரிசாமி, வாலிராஜன், பாண்டி உள்ளிட்ட 5 பேரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆணை பிறப்பித்தார். மேலும், இளைஞரை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் குறித்து தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர் உரிய விசாரணை மேற்கொள்வார் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில், ஏ.டி.எஸ்.பி ஜெரால்டு அலெக்சாண்டர் சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரையும் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஆட்டோ டிரைவரான ரமேஷ், மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி காவல் நிலையம் வரப்பட்டு, போலீசார் அவரை விசாரித்தது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ரமேஷ் தலைமறைவானார். இதனால் காவல் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த ஏ.டி.எஸ்.பி விசாரணை செய்ய முடியாமல் திரும்பி சென்றார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. போட்டு பொளக்கும் அன்புமணி..!