எந்த துணிச்சலில் செங்கோட்டையனை சந்தித்தார்கள்? அமித்ஷாவுக்கு திருமா. கேள்வி
செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அவரது ஆதரவாளர்கள் கட்சிப் பதவியையும் பறித்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான அதிமுகவினர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தனர். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டை கூற, ஓ பன்னீர்செல்வம் இதற்கு முழு ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவை கொடுத்தனர்.
அதிமுகவில் பல குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் செங்கோட்டையன் ஹரிதுவாருக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்த போராடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: “தவழ்ந்து முதல்வரான தவழ்புதல்வனே..” - பொள்ளாச்சியில் கால் வைத்ததுமே எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததை சுட்டிக்காட்டி திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். எந்த துணிச்சலில் அமித்ஷாவும், நிர்மலா சீதாராமானும் செங்கோட்டையனை சந்தித்தார்கள் என கேள்வி எழுப்பினார். அதிமுக தலைமை மீது பாஜக என்ன மதிப்பீடு வைத்துள்ளது என்பது இதில் இருந்தே வெட்ட வெளிச்சமாகி உள்ளது என தெரிவித்தார். செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார். இதற்கு மேலும் பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் அது குறித்து அதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!