×
 

வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

தமிழ்நாடு பட்ஜெட்டில் சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதையும் வெற்றி வீடு திட்ட தொகையை உயர்த்தியதையும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்த முழுமையான விவரங்களைப் படித்துப் பார்த்த பின்னரே விரிவான கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தமக்கை பானுமதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சில முக்கிய அறிவிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் இதர உபகரணங்களை வைக்கும் வசதியுள்ள இருசக்கர வாகனங்களை வழங்க அரசு முன்வந்திருப்ப வரவேற்புக்குரியது எனத் தெரிவித்தார்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை 'வெற்றி வீடு திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்து, வீடு கட்டும் நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், விசிக சார்பில் விடுக்கப்பட்டு வந்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்திற்கு 419 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.

இதையும் படிங்க: செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை (Overseas Scholarship) பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக நீதித்துறையைச் சுதந்திரமாக இயங்கச் செய்து கூடுதல் நிதி ஒதுக்கியுள்ள மாநில அரசிற்கும், முதலமைச்சருக்கும் விசிக சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share