பரபரக்கும் தி. மலை..!! அண்ணாமலையாரை தரிசிக்க செல்லும் அமித்ஷா..! 3 அடுக்கு பாதுகாப்பு..!
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்கிறார்.
திருவண்ணாமலை நகரம் இன்று ஆன்மிகமும் பாதுகாப்பும் இணைந்த விசேஷ சூழலில் மின்னிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்காக நகரம் முழுவதும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு வருகிறார்.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கிய பிறகு, முதலில் ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று பூஜையில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் செய்கிறார். இன்று மாலை நடைபெறும் இந்த தரிசனத்திற்குப் பிறகு மாலை 6.30 மணியளவில் புதுச்சேரிக்குப் புறப்படுகிறார்.
அவரது வருகையை முன்னிட்டு கோயில் வளாகம், கிரிவலப் பாதை, ஹெலிபேடு மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளும் இணைந்து செயல்படுகின்றன. கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று மற்றும் நாளை என இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?
பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிபேடு மற்றும் கோயில் பகுதிகளில் முன்கூட்டியே ஆய்வு மேற்கொண்டு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதி செய்துள்ளனர்.இந்த நேரத்தில் அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த புனித ஆலயத்திற்கு பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசித்து வழிபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘நீங்கள் அவை தலைவருக்கு உத்தரவிட முடியாது’! கார்கேவுக்கு கிரண் ரிஜிஜு பதிலடி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!