×
 

மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

இந்த சந்திப்புகளை வைத்து உடனடியாக கூட்டணி மாற்றம் என முடிவு செய்ய முடியாது என்றும் தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதீஷ் அடுத்தடுத்து சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்புகளின் பின்னணியில் தேமுதிக மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் தேமுதிக, பாஜக மற்றும் அதிமுக இடம்பெற்ற கூட்டணிகளில் இணைந்து தேர்தல்களை சந்தித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலிலும் தேமுதிக பாஜக-அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

திமுக சார்பில் வழங்கப்பட்ட மாநிலங்களவை இடத்தின் மூலம் தேமுதிக பொருளாளர் சுதீஷ் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி, தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், சுதீஷ் கடந்த 3-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்தித்தார். இந்த இரு சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழக அரசியல் நிலவரம், திமுக - தவெக இடையிலான நேரடி அரசியல் மோதல், திமுக 'இண்டி' கூட்டணியில் இருந்து விலகிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்தும் சுதீஷ் மத்திய தலைவர்களிடம் வலியுறுத்தியதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், பாஜகவுடன் தேமுதிகவுக்கு நட்பு இருப்பதாகவும், வேறு கூட்டணியில் இருந்தாலும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது கட்சி தலைமைக்கு நன்மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் முறையாக எம்.பி.யாகியுள்ள சுதீஷ், அந்த அடிப்படையில் இரு தலைவர்களையும் சந்தித்து பேசியதாகவும் கூறினர்.

மேகதாது அணை உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்னைகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து சந்திப்புகளில் பேசப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, இந்த சந்திப்புகளை வைத்து உடனடியாக கூட்டணி மாற்றம் என முடிவு செய்ய முடியாது என்றும் தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், எதிர்காலத்தில் கூட்டணி தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாதான் இறுதி முடிவு எடுப்பார் என தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுதீஷின் டெல்லி சந்திப்புகள் தமிழக அரசியலில் அடுத்தகட்ட கூட்டணி கணக்குகளுக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பு மட்டும் தற்போது அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 7 ஏன் முக்கியம்? நட்பு தினத்துடன் இன்று இதையும் கொண்டாடுங்கள்! பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share