×
 

கரூர் துயரம் குறித்து அவதூறு?! 3 பேர் கைது! யாரை காப்பாற்ற? எதை மறைக்க? நயினார் கோவம்!

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதிவாகியது. இதில் அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறுகளை பரப்பியதாக சென்னையை சேர்ந்த சகாயம். சிவனேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட பெரும் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாபெரும் துயரம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, உண்மைகளை ஆராய உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் மற்றும் பொய் செய்திகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மையை விசாரிக்கத் தொடங்கியது.

விசாரணையின் ஆரம்ப கட்டமாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், சமூக அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக சென்னையைச் சேர்ந்த மூவர் - சகாயம் (பாஜக உறுப்பினர்), சிவனேசன் மற்றும் சரத்குமார் (தவெக அடிப்படை உறுப்பினர்கள்) - கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க: Karur Stampede! பிரதமர் மோடி கொடுத்த அசைன்மெண்ட்! கரூர் வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், "கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மூவரை கைது செய்திருப்பது திமுக அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய துயர சம்பவத்தில், சகோதரத்துவத்துடன் மக்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அரசு, மக்களின் கேள்விகளை முடக்குவதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுப்பது நியாயமா?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், "இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். ஆனால், திமுக அரசு உண்மையை மறைக்கவும், தவறுகளை மூடி மறைக்கவும் இவ்வாறு அவசர வழக்கு பதிவு செய்கிறது. இது யாரைக் காப்பாற்ற? எதை மறைக்க? 41 அப்பாவி உயிர்களை பலி கொடுத்த இந்த துயரத்திற்கு நீதி வழங்க, சிபிஐ விசாரணை மூலம் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதுவே பலியானவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி" என நயினார் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளிவருமா, பலியானவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: #BREAKING! டாக்டர்ஸ் உடனே கரூர் வாங்க! பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல பீஸ் வாங்காதீங்க! பறக்கும் உத்தரவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share