×
 

கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!

திருச்செந்தூர் கோவிலில் இன்று மதியம் 2 மணி முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூலை மாதம் 7ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி யாக சாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது. மூலவர், பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் காலை மற்றும் மாலையில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 6.15 மணிக்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் தொடங்கியது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதையும் படிங்க: விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆன்மீக குருமார்கள், திருவாவடுதுறை, தருமபுரம் ஆதினகர்த்தர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என கோஷத்தை எழுப்பி குடமுழுக்கை கண்டு களித்தனர். மேலும் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி, நேற்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால், நேற்று பிற்பகல் முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, இராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்செந்துருக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமார் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் கும்பாபிசேகத்தை முன்னிட்டு மூன்று தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூன்று தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூர் கோவில் வாசலுக்கு இயக்கப்பட்டன.

தற்போது கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தற்காலிக பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். கோவிலில் இருந்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வரக்கூடிய பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் தொங்கிய நிலையில் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். சிலர், கூட்டம் அதிகம் இருப்பதால் பேருந்துகளில் ஏறாமல் நடந்தே தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. களைகட்டும் யாக சாலை பூஜை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share