×
 

#BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... பரபரக்கும் நீதிமன்றம்...!

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டதை நிறைவேற்ற முயன்றபோது நேற்றிரவு பெரும் பரபரப்பும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு, சிக்கந்தர் தர்கா மற்றும் இந்து அமைப்பு சார்பில் அனைத்து வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த இரு நீதிபதிகள் அமர்வு,  தற்போதைய நடைமுறை 100 ஆண்டுகளுக்கு பிறகு இருக்கும் எனக்கூற முடியுமா? என சிக்கந்தர் தர்கா மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தங்களது சடங்கை செய்யக்கூடாது என ஒரு தரப்பை சொல்வதால் மத நல்லிணக்கம் உருவாகாது என்றும், அனைத்து தரப்பும் தங்களது சடங்கை செய்தால் தான் மத நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்தனர். 

நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிபதி சுவாமிநாதன் யாரையும் தண்டிக்கவில்லை. கோவில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால்தான் நீதிபதி சுவாமிநாதன் சிஐஎஸ்எஃப் படையை அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். மற்றபடி நீதிபதி யாரையும் தண்டிக்கும்படி உத்தரவிடவில்லை என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!

தமிழ்நாடு அரசு வாதம்: 

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபமேற்ற நீதிபதி அனுமதி வழங்கினார். ஆனால், மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டனர், மதப் பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதே சிஐஎஸ்எஃப்-ன் பணி. அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத் தாண்டி மனுதாரருக்குப் பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. மத்திய தொழிலகப் பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு அளிக்க எப்படி உத்தரவிட முடியும்? உயர் நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது மட்டும் தான் சி.ஐ.எஸ்.எஃப்.-ன் வேலை."

மலை உச்சியில் உள்ளது தீபத்தூண். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மாற்ற இயலுமா? 100 ஆண்டு பழமையான வழக்கத்தை மாற்ற ஒருநொடியில் முடிவு எடுக்கலாமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும்; பல தீபங்கள் ஏற்ற இயலுமா? தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்யப் போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படவில்லை.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறித் தனி நீதிபதி செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தனி நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது என்றும், அவர் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டு உள்ளது துரதிஷ்டவசமானது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது. எனவே, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அறநிலையத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது 

தீபத்தூண் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை என்பதை மனுதாரரும், தனி நீதிபதியும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில், வழக்கு நிலுவையில் உள்ளபோது தனி நீதிபதி உத்தரவிட்டவுடன் உடனடியாக எப்படி தீபம் ஏற்ற முடியும் என அறநிலையத்துறை கேள்வி எழுப்பியது.

விளக்கமளிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கை எடுத்த அன்றே தண்டனை வழங்க இயலாது. இந்த வழக்கில் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என விசாரிக்கலாம் அல்லது அதற்கான விளக்கம் கேட்கலாம். ஆனால், உடனடியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

இந்து அமைப்பு வாதங்கள்: 

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால் தான் தனி நீதிபதி மாற்று ஏற்பாடாக மத்திய தொழிற் படை  பாதுகாப்பை செய்ய நேரிட்டது இந்து அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் நூறு வருடமாக ஏற்ற வில்லை என சொல்கிறார்கள் அது தவறு எங்கள் கலாச்சாரம் நூறு ஆண்டுகள் கிடையாது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என வாதிட்ட இந்து அமைப்பின் வழக்கறிஞர்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 மணிக்கு எடுக்கப்பட்ட போது, கோவில் நிர்வாகம் தரப்பில் யாரும் ஆஜராகி எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்றும், அரசுத்தரப்பில் முன் கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே நீதிபதி 6.05மணிக்கு வழக்கை எடுத்தார். காவல்துறையினர் போதிய பாதுகாப்பை அளிக்காத காரணத்தினாலேயே சி ஐ எஸ் எப் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டார் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த ராம ரவிக்குமார் தரப்பு வாதங்களை முன்வைத்தது. 

தர்கா தரப்பு வாதம்: 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா சார்பில், “கார்த்திகை தீபம் என்பது ஒரு இடத்தில் தான் ஏற்றப்படும் என்றும், 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் எப்படி செய்ய முடியும் என்றும், தீபத்தூண் என அழைக்கப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படவில்லை” என்றும் அடுக்கடுக்கான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

நீதிபதி கனகராஜின் உத்தரவில்,  “தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தீபமேற்றலாம் என கூறப்பட்டுள்ளது. அது தீபத்தூண் அல்ல. அது எல்லைக்கல் என்றும், தங்கள் தரப்பில் பிரதான வழக்கில் கூடுதல் விபரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினோம். ஆனால் வாய்ப்பு வழங்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. 

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? 

கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததால், மனுதாரர்கள் தொடுத்த வழக்கில், மனுதாரர்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருடன் (CISF) சென்று தீபமேற்றலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று  மாலை உத்தரவிட்டார். இதையடுத்து, மனுதாரர் ராமரவிக்குமார், சக மனுதாரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக அவர்கள் மலை உச்சிக்குச் செல்ல முயன்றபோது, அங்கு போலீசார் தடுப்புகளை அமைத்து அனுமதி மறுத்தனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை என்று கூறி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்புகளை உடைக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றச் சென்ற பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்ததையடுத்து மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரும், இந்து அமைப்பினரும் கலைந்து சென்றனர். 

திருப்பரங்குன்றம் கார்த்தி தீப விவகாரம் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறியதால், நேற்றிரவே தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் முறையிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரினார். அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் மோதல் சம்பவம்... இந்து முன்னணி நிர்வாகி உட்பட 13 பேர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share