“உட்காருங்க...” - சட்டப்பேரவைக்குள் வெடித்த அப்பா - மகன் பஞ்சாயத்து... டென்ஷன் ஆன அப்பாவு...!
ஜி.கே.மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க கூறி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஜி.கே. மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் கோஷம் எழுப்பி வருகிறார்கள். அன்புமணி ஆதரவு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது கோஷம் எழுப்பி வருகிறார்கள். கேள்வி நேரத்தில் அனுமதி தர முடியாது என பேரவை தலைவர் தற்போது தொடர்ந்து தெரிவித்து வரக்கூடிய நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாமக சட்டமன்ற குழு தலைவராக இருக்கக்கூடிய ஜி.கே மணியை மாற்றக்கோரி நேற்று அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்திருந்தனர். அத்தோடு பேரவை நுழைவாய் முன்பாக அமர்ந்து அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் தங்களுடைய மூன்று கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தற்பொழுது அவையில் அன்புமணி தரப்பு பாமக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: ராமதாஸ் ஐசியூவிற்கு போனாரா? மகன் கடமையில் இருந்து தவறிய அன்புமணி... பாமக MLA அருள் பகிரங்க குற்றச்சாட்டு...!
ஜிகே மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும், சேலம் அருள் எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கி விட்டதால் அவரை பாமக உறுப்பினராக ஆவணங்களில் பதிவு செய்யக்கூடாது, பாமக சட்டமன்ற குழு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய தருமபுரி வெங்கடேசனுக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், “நொந்தரவு செய்யாமல் உட்காருங்கள்... கேள்வி நேரம் முடிந்த பிறகு உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன்” என சபாநாயகர் அப்பாவு பாமக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் பாமக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த அப்பாவு, “மக்களுக்கான பிரச்சனைகளை பேசிக்கொண்டிருக்கிற நேரத்தில் இந்த மாதிரி செய்யாதீர்கள். உட்காருங்கள்” என மீண்டும், மீண்டும் வலியுறுத்தினார்.
பாமகவில் அப்பா - மகன் இடையிலான பிரச்சனைகள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது, கட்சியை விட்டு நீக்குவது என மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவைக்குள்ளும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா... தொலச்சிடுவேன்...” - உச்சக்கட்ட ஆவேசத்துடன் எச்சரித்த அன்புமணி...!