பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி நாளை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், களத்தில் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே தனது ஆட்டத்தைத் தொடங்குகிறது பாரதிய ஜனதா கட்சி. மத்திய அரசின் சாதனைகளைச் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், நாளை (பிப்ரவரி 17) முதல் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.
நாளை தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்களுக்குத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் காவிக்கொடி பறக்கப்போகிறது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம், மோடி அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் கொண்டு செல்லப்படும். தேர்தல் நெருங்கும் வேளையில், அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வாக்குச் சாவடி வாரியாகக் கட்சியை வலுப்படுத்துவதே இந்தத் தெருமுனைப் பிரச்சாரத்தின் முக்கிய இலக்காக உள்ளது.
இந்தப் பிரச்சாரத்தை வெறும் உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் நடத்தப்போவதில்லை; கட்சியின் மாநில மற்றும் மத்திய அமைச்சர்களே நேரடியாகக் களமிறங்குகிறார்கள். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!
சென்னை மேற்கு மாவட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் (மத்திய அமைச்சர்) பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். கரூரில் இந்தப் பிரச்சாரத்தை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைத் தொடங்கி வைக்கிறார். தென்சென்னை பகுதியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் வானதி சீனிவாசன் பிரசாரத்தை பயணத்தை ஆரம்பித்து வைக்கிறார்.
பாஜகவின் இந்தத் திடீர் தெருமுனைப் பிரச்சார அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக மக்கள் கூடும் இடங்களில் கூட்டங்களை நடத்துவதன் மூலம், தேர்தலுக்கான ‘மூட்’-ஐ தங்களுக்குச் சாதகமாக மாற்ற பாஜக நிர்வாகிகள் இப்போதே தயாராகிவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? நீங்களே முடிவு செய்யுங்கள்! - வாக்குச்சாவடி முகவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!