தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!
இடைக்கால பட்ஜெட்டிற்கு பச்சைக்கொடி இன்று மதியம் 12 மணிக்குக் கோட்டையில் ஆலோசனை, மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் புதியத் திட்டங்கள் குறித்து அதிரடி முடிவு எடுக்க வாய்ப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் நகர்வாகத் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழக அரசின் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக சில மாதங்களுக்கான செலவினங்களைக் கோரும் இடைக்கால பட்ஜெட் இம்மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் இடம்பெற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து இன்று விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
அரசு ஊழியர்களுக்கானப் பழைய ஓய்வூதியத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உயர்வு அல்லது கூடுதல் பயனாளிகள் சேர்ப்பு போன்ற மாஸ்டர் பிளான் அறிவிப்புகளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ளத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் டாடா குழுமத்தின் சமீபத்திய முதலீடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமைச்சரவையில் இரண்டாம் இடத்திற்குப் பின் முதல் முறையாக பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி சார்ந்தத் திட்டங்கள் குறித்துப் பல்வேறுப் பரிந்துரைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகத் திமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக மாநில அரசின் சார்பில் கவர்ச்சிகரமான மற்றும் ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். இன்றைய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளே 2026 தேர்தல் களத்தில் திமுகவின் பிரதானப் பிரச்சார ஆயுதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: பட்ஜெட் ஏமாற்றம்.. பெட்ரோல் விலை குறையாதது ஏன்? கோவையில் வைகோ பேட்டி!