தமிழக தேர்தல் 2026: வேட்புமனு வாபஸ் முடிந்தது! இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
2026 தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி. 83 வேட்பாளர்களில் 4 பேர் வாபஸ் பெற்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று மாலை 3:00 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலின்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கரூர் தொகுதியில் முன்னதாக 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. இன்று இறுதி நேரத்தில் 4 பேர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். தற்போது 79 வேட்பாளர்கள் களத்தில் எஞ்சியுள்ளனர். இதனால், இத்தொகுதியில் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கரூருக்கு அடுத்தபடியாகப் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 40-ஐத் தாண்டியுள்ளது: பெரம்பூரில் 47 வேட்பாளர்களும், கோவை தெற்கில் 44 வேட்பாளர்களும், கொளத்தூரில் 43 வேட்பாளர்களும் (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி), பரமத்தி வேலூரில் 43 வேட்பாளர்களும். ஆர்.கே. நகரில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தலுக்கு பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 43 பேர் களத்தில் இருப்பது, அத்தொகுதியின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல், கோவை தெற்கு தொகுதியிலும் கடும் போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இந்த உயர்வுக்குக் காரணம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இனிவரும் நாட்களில், வேட்பாளர்கள் தங்களது சின்னங்களுடன் வாக்காளர்களைச் சந்திக்கத் தீவிரப் பரப்புரையில் ஈடுபடுவார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அஇபுதமமுக முதல் வேட்பாளர் பட்டியல்: 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் வி.கே.சசிகலா!