குவாட்டருக்கு ரூ.100 ஜாஸ்தி!! டாஸ்மாக் மூடியதால் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜரூர்!!!
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு நேற்று முன்தினம் முதல் இன்று வரை விடுமுறை அளித்து, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்று வரும் நிலையில், மதுபான விற்பனைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் முறைகேடாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் மூலம் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், 21-ம் தேதி முதல் இன்று வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்த தொடர் விடுமுறையை எதிர்பார்த்து, 20-ம் தேதி பலரும் வழக்கத்தை விட அதிக அளவில் மது வாங்கி பதுக்கியதாக தெரிகிறது.
இருப்பினும், டாஸ்மாக் கடைகள் மூடியதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களின் பின்புறம், வெளிச்சம் குறைவான இடங்கள் மற்றும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சிலர் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ‘குவார்ட்டர்’ மது பாட்டில் எம்.ஆர்.பி. விலையுடன் கூடுதலாக 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
இதையும் படிங்க: இந்த எலெக்ஷனுக்கு இதுதான் அவுட் ஃபிட்!! விஜய் கெட்டப்! வெள்ளை சட்டை காக்கி பேண்ட்-க்கு டிமாண்ட்!
மேலும், சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அவ்வப்போது வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்கள், “தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை காரணமாக ஒருவருக்கு அதிக பாட்டில்கள் விற்க முடியவில்லை. சிலர் தினசரி சிறிய அளவில் வாங்கி சேர்த்து, இப்போது அதிக விலைக்கு விற்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதனிடையே, பேசின்பாலம் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், கே.பி.பார்க் குடியிருப்பில் 1,256 குவார்ட்டர் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஓட்டேரி, கொன்னூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இருப்பினும், டாஸ்மாக் மூடிய மூன்று நாட்களில் கள்ளச்சந்தை சுறுசுறுப்பாக இயங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மது வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கறாராய் நோ சொன்ன மோடி!! ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக்கூடாது! பாஜகவினருக்கு அட்வைஸ்!