லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!
மின்சார வாரியம் உட்பட எந்தவொரு துறையிலும் லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு இடமிருக்காது என அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. நிர்மல்குமார் அவர்கள், இன்று மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தவெக ஆட்சியில் எக்காரணம் கொண்டும் லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் சகித்துக் கொள்ளப்படாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் (TNEB Headquarters) இன்று நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் நேரில் பங்கேற்றுப் பணிகளை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு. ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் மின்வாரியத்தின் பல்வேறு மண்டல தலைமைப் பொறியாளர்கள், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மின்சார விநியோகம் மற்றும் கோடைக்காலப் மின் தேவைகள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய தவெக ஆட்சியில் மின்சார வாரியம் உட்பட எந்தவொரு அரசுத் துறையிலும் லஞ்ச லாவண்யங்களோ, டெண்டர் முறைகேடுகளோ முற்றிலும் இருக்காது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தங்கு தடையின்றி, நேர்மையான முறையில் மின் சேவைகள் சென்றடைய வேண்டும். துறையின் செயல்பாடுகள் அனைத்தும் அசுர வேகத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான தொனியில் அறிவுறுத்தினார். புதிய அரசு பொறுப்பேற்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் தங்களது துறைகளில் ஊழலுக்கு எதிரான இத்தகைய நேரடி ஆக்ஷன்களில் இறங்கியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!
இதையும் படிங்க: “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!