உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!
மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் குறு, சிறு தொழில்முனைவோர் உள்ளாட்சி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்த்து, மிக எளிதாகக் கட்டட அனுமதி பெறும் வகையில் மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டட அனுமதி வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தித் தமிழ்நாடு அரசு இரண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
2026–2027-ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண். 179 மற்றும் 180 ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளது.
அரசாணை எண். 179-ன் படி, குறிப்பிட்ட பரப்பளவிற்குட்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்கூடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி, 8,070 சதுர அடி (750 ச.மீ.) எஃப்.எஸ்.ஐ பரப்பளவு வரையிலான குடியிருப்புக் கட்டடங்களுக்கும், 3,230 சதுர அடி (300 ச.மீ.) வரையிலான வணிகக் கட்டடங்களுக்கும் இந்த முறை பொருந்தும். இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே கட்டட அனுமதியைப் பெற முடியும்.
இதையும் படிங்க: வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!
அதேபோல், சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் அரசு அங்கீகரித்த தொழிற்பேட்டை மனைப்பிரிவுகளில் அமையவுள்ள 26,900 சதுர அடி (2,500 ச.மீ.) கட்டடப் பரப்பளவு வரையிலான தொழிற்சாலைக் கட்டடங்களுக்கும் இந்நடவடிக்கை பொருந்தும் என்பதால், தொழில்முனைவோர் மாவட்ட அலுவலகங்களை நாடாமல் விரைவாக அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்முறையில், தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவு பெற்ற கட்டடக்கலை வல்லுநர்கள் அல்லது முதல் நிலை பதிவு செய்த பொறியாளர்கள் மூன்றாம் தரப்பாகச் செயல்பட்டு, தள ஆய்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் விதிமுறை இணக்கத்தை உறுதி செய்து இணையவழியில் மின்னணுச் சான்றிதழை வழங்குவர்.
இதனைத் தொடர்ந்து, அரசாணை எண். 180-ன் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டட அனுமதி அதிகாரப் பகிர்வு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்புக் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் தற்போதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாகவும் (1,500 ச.மீ.), பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 10,000 சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாகவும் (1,200 ச.மீ.) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிகக் கட்டட அனுமதிக்கான வரம்பு தற்போதுள்ள 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக (500 ச.மீ.) உயர்த்தப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகப் படிநிலைகளைக் குறைத்து, தொழில் செய்வதை எளிதாக்கும் வகையிலும் பொதுமக்களின் அலைச்சலை முற்றிலுமாக ஒழிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மாபெரும் ஊக்கமளிக்கும் என்று செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!