திருமண உதவித் திட்டங்கள்: ரூ.45 கோடியில் 5,460 தங்க நாணயங்கள் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
4 திருமண நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பில் 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணச் செலவுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 8 கிராம் 22 காரட் தங்க நாணயங்கள் மற்றும் பண உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம் ஆகியவை அடங்கும். இவை ஏழைப் பெண்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு உதவுகின்றன.
இதையும் படிங்க: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ.. ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசு..!!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, நான்கு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.45 கோடி மதிப்பில் (அதாவது 43 கிலோ) 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது. இந்த நாணயங்கள் 22 காரட் தங்கத்தால் ஆனவை மற்றும் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டவை.
இந்த 4 திட்டங்களின் மூலம், ஏழைப் பெற்றோரின் பெண்கள், விதவைகள் மறுமணம், அநாதைப் பெண்கள் மற்றும் புரட்சிகர திருமணம் செய்பவர்களுக்கு நிதியுதவியுடன் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ வைத்தவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.50,000 பண உதவியும், பட்டப்படிப்பு இல்லாதவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25,000 பண உதவியும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகள், திருமண செலவுகளை ஈடுகட்டவும், பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், சமூக சீர்திருத்தத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கடந்த 2019-இல் அதிமுக ஆட்சியில் தங்க நாணய வழங்கல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த டெண்டர் மூலம், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிறைவேற்றவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ.117.18 கோடியாகும், இதில் ரூ.45 கோடி இந்த 5,460 தங்க நாணயங்களுக்காக பயன்படுத்தப்படும். இத்திட்டங்கள் மூலம் ஆண்டுதோறும் சராசரியாக 70,000 முதல் 90,000 பயனாளிகள் பயனடைந்து வருவதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
1. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
உதவி தொகை: ₹15,000 , ₹10,000 (தேசிய சேமிப்புச் சான்றிதழ்)
தங்கம்: 8 கிராம் 22 காரட் நாணயம்
தகுதி: வருமானம்/கல்வித் தகுதி இல்லை
பட்டம்/பட்டயம் பெற்றோர்: ₹50,000 (₹30,000 மின்னணு + ₹20,000 சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
2. ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்உதவி தொகை: ₹25,000 + 8 கிராம் தங்கம்
வருமான வரம்பு: குடும்ப வருமானம் ஆண்டு ₹1,20,000 க்கு மிகாமல் இருத்தல் அவசியம்
பட்டப்படிப்பு பெற்றோர்: ₹50,000 + 8 கிராம் தங்கம்
3. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்
உதவி தொகை: ₹25,000 + 8 கிராம் தங்கம்
தகுதி: வருமானம்/கல்வித் தகுதி இல்லை
பட்டப்படிப்பு பெற்றோர்: ₹50,000 + 8 கிராம் தங்கம்
4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி
உதவி தொகை: ₹15,000 (மின்னணு) + ₹10,000 (சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
பட்டம்/பட்டயம் பெற்றோர்: ₹30,000 (மின்னணு) + ₹20,000 (சான்றிதழ்) + 8 கிராம் தங்கம்
தகுதி: வருமான வரம்பு இல்லை
இதையும் படிங்க: இளைஞர்கள் எதிர்காலம் கிள்ளுக் கீரையா? TNPSC தேர்வுத்தாளில் கவனக்குறைவு... அண்ணாமலை கண்டனம்..!