இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம்.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாடு 2024-25 நிதியாண்டில் 11.19% என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலமாக சாதனை படைத்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, இது 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சியாகும். 2010-11ல் 13.12% வளர்ச்சியைப் பதிவு செய்தபோதும் திமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2024-25ல் ₹17,32,189 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இந்த வளர்ச்சி, சேவைத் துறை (53%) மற்றும் தொழில்துறை (37%) ஆகியவற்றால் உந்தப்பட்டது, குறிப்பாக தொழில்முறை சேவைகள் (13.6%) மற்றும் கட்டுமானம் (10.6%) ஆகியவை முக்கிய பங்கு வகித்தன. மாநிலத்தின் தனிநபர் வருமானம் ₹3,61,619 ஆக உயர்ந்து, இந்தியாவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி.. ஆக.,19-ல் விசாரணையை துவங்கும் சுப்ரீம் கோர்ட்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்மயமாக்கல் மற்றும் சமூகநலக் கொள்கைகளால் இந்த சாதனையை எட்டியுள்ளது. 2030-க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்கை நோக்கி, தமிழ்நாடு 12% ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஷண்முகம் தெரிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும், இது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்பு 9.69% என்று மதிப்பிடப்பட்ட 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதர வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19% என்று திருத்தி மதிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்று விடாத அபரிமிதமான பெரும் வளர்ச்சி. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2 இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழ்நாடு என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக்காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிடம் மாடல் அரசு. நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா.. அதையும் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகி உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு எப்படி சாத்தியமாகும்? என்றார்கள், இதே வேகத்தில் சென்றால் எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது என்று பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
என்ற திருக்குறளை பகிர்ந்து இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆப்பிள் உதிரிபாக ஆலைகள்.. இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா..!!