#BREAKING: “அந்த சிவப்பு கோடு இல்லையா? தொடவே வேண்டாம்!” - போலி மருந்துகளை துரத்தும் சுகாதாரத்துறை!
தமிழகத்தில் ஆன்டிபயாட்டிக் மருந்து அட்டைகளின் பின்புறம் சிவப்பு நிறக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ஆன்டிபயாட்டிக் (Antibiotic) மாத்திரைகளின் அட்டையில் பின்புறம் ‘சிவப்பு கோடு’ பட்டை இருந்தால் மட்டுமே அவற்றை வாங்க வேண்டும்; இல்லையெனில் அவை போலி மருந்தாக இருக்க வாய்ப்புள்ளது” எனத் தமிழகப் பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற இருமல் மருந்துகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் என்ற பெயரில் உயிரைப் பறிக்கும் போலி மருந்துகள் புழக்கத்திற்கு வந்துள்ளதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டு அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அண்டை மாநிலமான புதுவையிலும் பிரபல நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திப் போலியான மருந்துகள் விற்கப்படுவதைக் காவல்துறையினர் கண்டுபிடித்துச் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ‘பேட்ச்’ (Batch) மருந்துகள் தமிழகத்தில் எங்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அவற்றைத் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!
போலி மருந்துகளின் நடமாட்டத்தைத் தடுக்கத் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்கம் தற்போது புதிய முறையைக் கையாண்டு வருகிறது. அதன்படி, மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் குறித்துச் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது போலி மருந்துகள் கண்டறியப்பட்டாலோ, கடைகளில் ஒட்டப்பட்டுள்ள க்யூ.ஆர் (QR Code) குறியீட்டை ஸ்கேன் செய்து பொதுமக்கள் உடனடியாகப் புகாரளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் குறித்துத் தமிழகப் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுரையில், “எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரையாக இருந்தாலும், அதன் அட்டையின் பின்புறம் ஒரு சிவப்பு கோடு பட்டை (Red Line) இருப்பது அவசியம். அப்படிச் சிவப்புக் கோடு இல்லாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்” என எச்சரித்துள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தானாகவே வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்கவும், மருந்து வாங்கும் போது அட்டை மற்றும் காலாவதி தேதியைச் சரிபார்க்கவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் சந்தைக்கு வருவதைத் தடுக்கத் தீவிரச் சோதனைகள் நடைபெற்று வரும் வேளையில், அரசின் இந்த ‘ரெட் லைன்’ விழிப்புணர்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், போலி மருந்து மாஃபியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஒரு கையில் ஸ்டீயரிங்.. மறு கையில் போன்!" பேருந்து ஓட்டுநர்களுக்கு MTC கடும் எச்சரிக்கை!