பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!
மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் கேட்கும் நடைமுறை தடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் நிலவிய முறைகேடுகளை ஒழித்து, போதைப்பழக்கமற்ற சமூகத்தை உருவாக்குவதே தமிழக வெற்றிக் கழக அரசின் முதன்மை இலக்கு என அறிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலங்களில் டாஸ்மாக் துறையில் நிலவிய ஊழல்கள் அனைவருக்கும் தெரிந்தவை எனக் குறிப்பிட்ட அவர், பார்ட்டி பண்டு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அடுத்த கட்டமாக பாட்டில் பண்டு என்ற முறைகேடும் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும், மது வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் கேட்கும் நடைமுறை தடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஏற்கனவே பல முறைகேடுகள் தனித்தனியாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது பெரும்பாலானவை சரிசெய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். பக்கத்து மாநிலங்களில் இந்தத் துறை பிரச்சினையின்றி இயங்குவதைப் போல, தமிழகத்திலும் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??
அரசின் நோக்கம் வெறும் நிர்வாக சீர்திருத்தம் மட்டும் அல்ல. சமுதாயத்தின் மனநிலையை மாற்றி, மதுப்பழக்கத்திலிருந்து மக்களை மீட்பதே முழுமையான இலக்கு. அடுத்த தலைமுறையை போதைப்பழக்கம் இல்லாத தலைமுறையாக உருவாக்குவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பணி என அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்காக 234 தொகுதிகளிலும் போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். தற்போது தமிழகத்தில் 25 மையங்கள் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து இவற்றின் எண்ணிக்கையை பெருக்கி, விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரப்படுத்தி அதிக மது அருந்துவோரை விடுவிப்பதே திட்டம்.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த அமைச்சர், இந்த அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே ஊதிய உயர்வு, பராமரிப்பு செலவு, சீருடை, பொங்கல் முன்பணம், தீபாவளி போனஸ், ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை, வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை, மாதம் இரண்டு நாள் ஊதியத்துடன் விடுமுறை மற்றும் ESI திட்டங்கள் போன்ற பல சலுகைகள் அமலுக்கு வந்துள்ளன எனத் தெரிவித்தார்.
23 ஆண்டுகளில் இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை என ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. கூலித் தொழிலாளர்கள், மூட்டை தூக்குபவர்கள் போன்றவர்களிடமிருந்து கூடுதல் பணம் வசூலிப்பதை அரசு விரும்பவில்லை. முறைகேடுகள் நடக்கக் கூடாது என்பதில் தெளிவு உள்ளது. பணிக்கு வராத ஊழியர்கள் உடனடியாக திரும்ப வேண்டும்.
100 நாட்களில் மேலும் சலுகைகள் வழங்கப்படும். தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள் அனுமதி குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கேரளா வழியாக எரிசாராயம் பக்கத்து மாநில கள்ளுக் கடைகளுக்குச் செல்வதாக தகவல்கள் உள்ளன. சாதக-பாதகங்களை ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!