தமிழ்நாட்டின் AI புரட்சி..!! ரூ.10 ஆயிரம் கோடியில் AI பார்க்..!! அதுவும் சென்னையில்.. அசத்தும் தமிழக அரசு..!!
சென்னை தரமணியில் ரூ.10,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு (AI) பூங்கா அமைக்கப்பட உள்ளது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டு வரும் சூழலில், தமிழ்நாடு அரசு இத்துறையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. சென்னை தரமணியில் ரூ.10,000 கோடி முதலீட்டுடன் அமைய உள்ள AI பூங்கா, மாநிலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தன்னாட்சி பூங்கா, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா அருகே அமைக்கப்பட உள்ளது.
அமெரிக்கா, சீனா போன்ற முன்னணி நாடுகள் AIயில் பெரும் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாடும் சொந்த AI கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், AI தொழில்நுட்பத்தை தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும் ஏற்ற வகையில் வடிவமைப்பதாகும். இதற்காக, பெங்களூரு தலைமையகமுள்ள 'சர்வம்' நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளது.
இதையும் படிங்க: 6 மாசத்துல 30,000 பேர்.. 2026-லயும் பணிநீக்கம் தொடரும்! TCS கொடுத்த ஷாக் அப்டேட்!
இந்த AI பூங்கா மூலம், சுமார் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது. தற்போது AIயைப் பயன்படுத்தும் மாணவர்களும் இளைஞர்களும், அதை உருவாக்கும் மையத்துக்கே நேரடி அணுகல் பெறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், தமிழக மக்களின் தரவுகள் அனைத்தும் மாநிலத்திற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமிக்கப்படும். வெளிநாட்டு சர்வர்களைச் சார்ந்திருக்கும் நிலை குறையும் என்பதால், தரவு பாதுகாப்பு கவலைகள் தீரும்.
இப்பூங்காவின் பலன்கள் கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவலாகும். மாணவர்களுக்கு பல மொழி பாடப்பொருள்கள் தமிழில் எளிதாக விளக்கப்படும். விவசாயிகளுக்கு தமிழில் பயிர் ஆலோசனைகள், சந்தை தகவல்கள் வழங்கப்படும். மருத்துவத்தில், நோய் அறிகுறிகளும் அடிப்படை ஆலோசனைகளும் தமிழில் கிடைக்கும். தமிழின் இலக்கணம், வட்டார வழக்குச் சொற்கள், கலாச்சார நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் AI மாதிரிகள் உருவாக்கப்படும். இதனால், அரசு அலுவலகங்களில் கோப்பு மேலாண்மை போன்ற பணிகள் எளிமையடையும்.
இத்திட்டம், தமிழ்நாட்டை AI பயன்படுத்தும் மாநிலமாக மட்டுமல்லாமல், உலகத்துக்கு AI தீர்வுகள் வழங்கும் மையமாக மாற்றும் திறன் கொண்டது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு ஏற்கனவே தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகிறது. ஐடி பூங்காக்கள், நியோ டைடல் பார்க், மினி டைடல் பார்க் போன்றவை மாநிலத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட சேவைகள் வாட்ஸாப்பில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், AI பூங்கா அதிநவீன தொழில்நுட்பங்களை இணைத்து, அரசு சேவைகளை வேகமாகவும் துல்லியமாகவும் மக்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன. 30 வரை அவகாசம்..!