×
 

2026-க்கு தயாராகும் இளைஞர் படை! பெயர் சேர்க்க வாக்குச்சாவடிகளில் அலைமோதிய புதிய வாக்காளர்கள்! 

தமிழகம் முழுவதும் நேற்று மற்றும் இன்று (டிசம்பர் 27, 28) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் லட்சக்கணக்கானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே, விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது தேர்தல் ஆணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, முதன்முறை வாக்களிக்கக் காத்திருக்கும் இளைய தலைமுறையினர் இணையதளம் மற்றும் முகாம்கள் வாயிலாகப் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்காகத் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாமில், ஒரே நாளில் மட்டும் சுமார் 2.57 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலோர் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ஆம் தேதி முதல் இன்று வரை, ஒட்டுமொத்தமாக 4,42,070 பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைக்க விண்ணப்பித்துள்ளனர். நேற்று நடைபெற்ற முகாமில் மட்டும் விண்ணப்பங்கள் குவிந்ததைக் கண்ட தேர்தல் அதிகாரிகள், பொதுமக்களின் இந்த விழிப்புணர்வைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர். பெயர் சேர்ப்பது (படிவம் 6) மட்டுமின்றி, முகவரி மாற்றம் (படிவம் 8) மற்றும் பெயர் நீக்கம் (படிவம் 7) ஆகியவற்றுக்கும் கணிசமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: “திமுக பக்கம் திரும்புமா அ.ம.மு.க பார்வை?” - திருச்சியில் டி.டி.வி. தினகரன் சஸ்பென்ஸ்!

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்றும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, அடுத்த வாரம் ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் இறுதி கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால், விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகம் இப்போதே தயாராகி வருவதைத் தற்போதைய இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share