ஊண் உறக்கம் இல்லை! திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு!
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! என தனது சமூக வலைத்தள பக்கத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!" எனத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகத் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுதோறும் சென்றடைந்துள்ள 'திராவிட மாடல்' அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அடுத்த கட்டமாக 'திராவிட மாடல் 2.0' அமைவதை உறுதி செய்யும் வரை தொண்டர்களுக்கு ஓய்வு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதியே திமுக-வின் அடையாளம் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!
வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவில், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபட வேண்டும் என அவர் கட்டளையிட்டுள்ளார்.
நமக்கு ஊண் உறக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி வீடு வீடாகச் சென்று சாதனைகளை விளக்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'வோர் ரூம்' (War Room) பணிகளைத் தொடங்கி, தொண்டர்களைக் களப்பணிக்குத் தயார்படுத்தியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!