சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!
ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்திற்கு 128 வாகனங்களில் பறக்கும் படையினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு வாகனத்திற்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர், காவலர், வருவாய்த்துறை அதிகாரி, ஒரு ஒளிப்பதிவாளர் இருப்பார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தேர்தல் கண்காணிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள ஒட்டுமொத்தமாக 128 வாகனங்களில் பறக்கும் படையினர் (Flying Squads) அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வாகனங்களில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டும் பணி இன்று மாலை முதலே தொடங்கியது.
ஒவ்வொரு கண்காணிப்பு வாகனத்திலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் (SI), ஒரு காவலர், ஒரு வருவாய்த்துறை அதிகாரி மற்றும் முழு நடவடிக்கைகளையும் பதிவு செய்ய ஒரு ஒளிப்பதிவாளர் (Videographer) என நான்கு பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதையும் படிங்க: தேர்தல் திருவிழா தொடக்கம்...! 5 மாநிலத் தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுப்பதே இவர்களின் முதன்மைப் பணி. உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வது கண்டறியப்பட்டால், அதனைப் பறிமுதல் செய்ய இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில், அம்மா மாளிகையிலிருந்து அனைத்துப் பறக்கும் படைகளும் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இந்த வாகனங்கள் ஜிபிஎஸ் (GPS) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், சென்னையில் அரசியல் கட்சிப் பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றும் பணியும் மாநகராட்சி ஊழியர்களால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை 16 தொகுதிகளுக்கும் நோடல் அலுவலர்கள் நியமனம்.... மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் உத்தரவு!