அதிமுக-தான் எனக்கு ஆதியும் அந்தமும்! ஆனால் புறக்கணிக்கப்பட்டேன்! முன்னாள் சபாநாயகர் ப. தனபால் உருக்கம்!
மகன் மாற்றுக்கட்சியில் இணைந்தாலும், தன்னைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் அதிமுக தான் என தனது விசுவாசத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ப. தனபால் அவர்கள், இன்று தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலத் தனது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய புறக்கணிப்பு குறித்து அவர் மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
1972-ல் எம்.ஜி.ஆர். அதிமுக-வைத் தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியில் பணியாற்றி வருவதைக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர். காலத்தில் 3 முறையும், அம்மா (ஜெயலலிதா) காலத்தில் 5 முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சபாநாயகர், அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை எனக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,எனத் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாகத் தனது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அதிமுக தலைமை அல்லது நிர்வாகிகள் எவரும் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும், தொலைபேசி வாயிலாகக் கூட நலம் விசாரிக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 1988-ல் எனக்கு விபத்து ஏற்பட்டபோது அம்மா அவர்கள் நேரில் வந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று அந்தத் தாயில்லாத நிலையை நான் உணர்கிறேன், என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதில் தனக்கு வருத்தமில்லை என்று கூறியுள்ள அவர், உடல்நலம் குன்றியிருந்த தன்னை யாரும் கவனிக்காத விரக்தியில்தான் தனது மகன் லோகேஷ் தனபால், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் தனபால் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகத் தவெக சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் மாற்றுக்கட்சியில் இணைந்தாலும், தன்னைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் எனத் திட்டவட்டமாகக் கூறித் தனது விசுவாசத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
சபாநாயகராக நீண்ட காலம் பணியாற்றிய ஒரு மூத்த தலைவர், தேர்தல் நேரத்தில் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!