வித்தியாசமான தேர்தல்.. மக்கள் ஆர்வமா இருக்காங்க! சென்னையில் வாக்களித்த பிறகு நடிகர் சிம்பு, வடிவேலு பேட்டி!
அரசியல் வருகை குறித்துச் சிம்புவின் கலகலப்பான பதில்; வெளிநாட்டுத் தமிழர்களுக்கு வடிவேலு பாராட்டு.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா மையத்திலும், நடிகர் வடிவேலு விருகம்பாக்கம் தொகுதியிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான உணர்வைத் தருவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தேர்தல் ரொம்ப வித்தியாசமா இருக்கு. எல்லாரும் ஓட்டு போட்டே ஆகணும்ங்கிற ஆர்வத்துல இருக்காங்க. மே 10 (தேர்தல் முடிவு நாள்) என்ன நடக்குதுன்னு பார்ப்போம் எனத் தெரிவித்தார்.
அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யை வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு எல்லாக் கட்சியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நாசுக்காகப் பதிலளித்தார். நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்குச் சிரித்துக்கொண்டே, ஏம்மா நான் ஜாலியா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா? இப்பதான் என் பிரச்சினை எல்லாம் தீர்ந்து நடிக்கலாம்னு ஒரு மூட்ல இருக்கேன், அதைக் கெடுத்துருவ போல எனத் தனது பாணியில் பதிலளித்தார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அதிர்ச்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரின் ஏஜென்ட்!
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்த நடிகர் வடிவேலு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். வெளிநாட்டுத் தமிழர்கள்: தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களிப்பவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவங்க நம்ம மக்கள் தானே, தமிழர் தானே.. ஓட்டு போட்டுப் போகட்டுமே, அது மகிழ்ச்சி தரும் விஷயம் என்றார். 'Commission, Collection, Corruption' என்ற 3C பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, அது பற்றி எனக்குத் தெரியாது எனத் தவிர்த்தார். தேர்தல் புரிதல் குறித்துக் கேட்கப்பட்டபோது, வடிவேலு தனது வழக்கமான பாணியில் சைகையிலேயே பதிலளித்துச் செய்தியாளர்களைச் சிரிக்க வைத்தார்.
எதற்கும் மாற்றம் வேண்டும் என்பது புரியவில்லை என நடிகர் சிம்பு ஒரு கருத்தை முன்வைத்தார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வாக்கு உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
திரையுலக நட்சத்திரங்களின் இந்த வருகை, மதிய நேர வெயிலிலும் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த இளைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்தது.
இதையும் படிங்க: வாக்காளர் அட்டை இல்லையா? இந்த 12 ஆதாரங்கள் போதுமே?! இந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்!!