குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடி மாற்றம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நேற்று நடத்தவிருந்த குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஏ. சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அந்தப் பதவியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தற்போது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வரும் பி. ஸ்ரீ வெங்கடப்பிரியா ஐஏஎஸ் புதியத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகச் சில மென்பொருள் தவறுகள நடந்திருப்பதாகத் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 தேர்வர்களுக்குத் தவறான மையங்கள் ஒதுக்கப்பட்டன. 300 பேர் மட்டுமே தேர்வு எழுத வேண்டிய ஒரு சிறிய மையத்திற்கு, 1,000 தேர்வர்கள் வந்து சேர்ந்ததால் அங்குப் பெரும் நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது. வினாத்தாளில் இருந்தப் பதிவெண் வரிசையும், இருக்கை அமைப்பும் பொருந்தாததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் மூல காரணமாக அமைந்தது.
மேலும், சென்னையில் உள்ள சிலத் தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மற்றும் வினாத்தாள்கள் குளறுபடி காரணமாகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடையேப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் ரத்து: தேர்வாணைய தலைவர் எஸ்.கே. பிரபாகர் அறிவிப்பு!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கருதி, ஒத்திவைக்கப்பட்டத் தேர்வு குறித்தத் தெளிவான அட்டவணையைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2A முதன்மைத் தேர்வுகள் (தாள் 1 மற்றும் தாள் 2) மற்றும் தமிழ் தகுதித் தேர்வு ஆகியவற்றுக்கானப் புதியத் தேதிகள் இன்னும் இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவிருக்கும் குரூப் 2 (நேர்முகத் தேர்வுப் பதவிகள்) இரண்டாம் தாள் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றித் திட்டமிட்டபடி நடைபெறும்.
குளறுபடிக்கு உள்ளானத் தேர்வர்களுக்குப் புதியத் தேர்வு மையங்களுடன் கூடிய புதிய ஹால் டிக்கெட்டுகள் வரும் பிப்ரவரி 13, 2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது 'ஒருமுறைப் பதிவின்' (OTR) மூலம் இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!