குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு.. வெளியானது உத்தேச விடைப் பட்டியல்..!!
அக்டோபர் 13 ஆம் தேதி மாலை 5:45 மணி வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை இன்று (அக்டோபர் 6 ஆம் தேதி) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு துணை ஆட்சியர், வணிக வரி உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட முக்கிய அரசுப் பதவிகளில் உள்ள 46 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது.
லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். உத்தேச விடைக்குறிப்பு வெளியானதால், தேர்வர்கள் தங்கள் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்து எதிர்பார்க்கும் மதிப்பெண்களைக் கணக்கிட முடியும். பொது அறிவு மற்றும் திறனறிவு (Subject Code 497) என்ற தாளுக்குரிய இந்த விடைக்குறிப்பு, அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் பதிவேற்றப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அந்த இணையதளத்திற்குச் சென்று உத்தேச விடைக்குறிப்புப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைக்குறிப்பில் ஏதேனும் பிழை இருப்பதாக உணரும் தேர்வர்கள், தங்கள் மறுப்புகள் அல்லது கருத்துகளை ஏழு நாட்களுக்குள் மட்டும் இணையவழி மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர் 13 ஆம் தேதி மாலை 5:45 மணி வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு..!! 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்ப்பு!!
அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது எனத் தேர்வாணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும்போது அதிகாரப்பூர்வ மாதிரி வினாத்தாளில் உள்ள வினா எண்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த முதல்நிலைத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.
இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குத் தகுதிபெறுவார். உத்தேச விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு..!! 10,000 காலி பணியிடங்கள் எதிர்பார்ப்பு!!